சட்ட விழிப்புணர்வு முகாம்

மாணவர்கள் அடிப்படை உரிமை சட்டங்களை அறிய முனைப்பு காட்ட வேண்டும் என்று செய்யாறு அரசு கல்லூரியில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில், சார்பு நீதிபதி கீதாராணி கூறினார். செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று மாலை நடந்தது. செய்யாறு வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடந்த முகாமிற்கு, கல்லூரி முதல்வர் எஸ்.நிர்மலாதேவி தலைமை தாங்கினார். பேராசிரியர் ஆ.மூர்த்தி வரவேற்றார்.
அட்வகேட் அசோசியேஷன் தலைவர் என்.ஜானகிராமன், செயலாளர் எஸ்.ஆனந்தன், வழக்கறிஞர்கள் ஜி.புவனேந்திரன், ஏ.சான்பாஷா, பி.சிலம்பரசன், ஆர்.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில், சிறப்பு விருந்தினர்களாக சார்பு நீதிபதி கே.கீதாராணி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.ஜெய்சங்கர் ஆகியோர் மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படை சட்டங்கள் குறித்து பேசினார். அப்போது, சார்பு நீதிபதி கே.கீதாராணி பேசியதாவது: 50 ஆண்டுகள் கடந்து சரித்திரம் படைக்கும் இக்கல்லூரியல் படித்த நீதியரசர்கள் முரளிதரன், கிருபாகரன் ஆகியோர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக உள்ளதை நினைத்து பெருமைபடுகிறோம். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கல்லூரி மாணவர்களை நோக்கி சட்டப் பயணம் மேற்கொண்டுள்ளோம்.

பகடி வதை எனப்படும் கேலி வதையை தடுக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. சட்டங்களை மதித்து அனைவரும் நடந்துகொள்ள வேண்டும். சட்டத்தின் முன் அணைவரும் சமம் என்ற நோக்கில் ஒருவரது உணர்வை இன்னொருவர் மதித்து நடந்தால் பிரச்னைகள் வராது.
மனதளவிலோ, உடலளவிலோ கொடுமைகள் ஏதேனும் நடந்தால் அதுதான் கேலி வதை என்று சட்டம் சொல்கிறது. மாணவர்களுக்கு இடையே ஒற்றுமை எண்ணங்கள் மேலோங்கியும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் வேண்டும் மாணவர்கள் அடிப்படை உரிமை சட்டங்களை அறிந்துகொள்ள முனைப்பு காட்ட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். முகாமில், பேராசிரியர்கள் மாரிமுத்து, மாலா, மணி, துரைரராஜ், ரவிச்சந்திரன், ரமேஷ்பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர். வட்ட சட்டப்பணிகள் குழு இளநிலை உதவியாளர் சையத்ரஷீத் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *